மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ் 8 கி.மீ தூரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (மார்ச் 3) நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு, நடைபயணம் மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கோட்டாட்சியர் யுரேகா உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 'போலியோ சொட்டு மருந்து' வழங்கும் முகாமை மயிலாடுதுறை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
இந்தியாவில் போலியோ நோயை அறவே ஒழிக்கும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக மாறிவரும் நிலையில், இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில், மயிலாடுதுறையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர், குழந்தைகள் விளையாடுவதற்காக ஜேசிபி இயந்திர வாகன பொம்மைகளை குழந்தைகளுக்கு பரிசளித்தார்.
மேலும், மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 543 இடங்கள், நகர்ப்புறங்களில் 39 இடங்கள் என்று மொத்தம் 582 மையங்களில் இந்த இலவச போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் 8 ஆயிரத்து 409 குழந்தைகள், கிராமப்புறங்களில் 53 ஆயிரத்து 768 குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் 10 குழந்தைகள் என 62 ஆயிரத்து 187 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என்றும் இன்று விடுபட்டவர்கள் நாளை (மார்ச் 4) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெறும் சிறப்பு முகாம்களில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்காக 3 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: '2026-ல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி' - அண்ணாமலை பேச்சு