நீலகிரி: சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிவிப்பின் படி, "தமிழகத்தில் மே 18ஆம் தேதி அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மே 19ஆம் தேதி அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மே 20ஆம் தேதி அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் எம்.அருணா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "நீலகிரி மாவட்டத்திற்கு 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த மூன்று நாட்களில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு பாதுகாப்புடன் வந்து செல்ல வேண்டும் என்றும், முடிந்த அளவு சுற்றுலா வருவதைத் தவிர்ப்பது நல்லது என்றும், இயற்கை பேரிடர் ஏதேனும் நிகழ்ந்தால் அதனை சரி செய்ய நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நெல்லை சிறுவன் சடலமாக மீட்பு - Tenkasi Courtallam Flood