தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் 'டிஸ்கவர் தஞ்சாவூர்' (DISCOVER THANJAVUR) என்ற சிறப்பு பயிற்சி முகாம் தஞ்சை அருங்காட்சியத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
இதில், நேற்று நடைபெற்ற உணவு பாரம்பரிய முகாமில் தஞ்சையை ஆண்ட சோழர், நாயக்கர், மராத்தியர்கள் ஆகியோர் எந்த மாதிரியான உணவுகளைப் பயன்படுத்தினார்கள்? என்பதையும் தற்போது எந்த மாதிரியான உணவுகள் தஞ்சைக்கு பெருமை சேர்த்து வருகிறது என்பதை மாணவர்களுக்கு விளக்கினர்.
மராட்டா மட்டன் கோலா, கும்பகோணம் கடப்பா, கும்பகோணம் பில்டர் காபி, தஞ்சாவூர் சந்திரகலா, திருவையாறு அசோகா ஆகிய 5 விதமான உணவுகள் செய்முறை குறித்து வல்லுநர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவு வாங்கி தருவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், மாணவர்களுக்கு செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்த முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவி சுஜிதா கூறுகையில், 'நமது ஊர், இடம் பற்றி தெரிந்து கொள்வதே இந்த முகாமின் நோக்கம். தஞ்சை அருங்காட்சியம் எப்போது, எதற்காக ஆரம்பித்தார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். தஞ்சையில் உள்ள அனைத்து அருங்காட்சியத்திற்கும் அழைத்து சென்று அதனுடைய சிறப்புகளை கற்றுக்கொடுத்தார்கள்.
மராத்தியர்கள் தஞ்சையை ஆண்ட போது, உணவுப்பழக்கம் எப்படி இருந்தது, என்ன சிறப்பு என்பதை முகாமில் தெரியப்படுத்தினார்கள். தஞ்சை சிறப்பு உணவுகளான சந்திரகலா, அசோகா போன்ற உணவுகளின் செய்முறைகளை கற்றுக்கொடுத்தார்கள்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதேபோல பேசிய மாணவி அர்ஷிதா, 'இந்த முகாமின் மூலம் தஞ்சையின் பாரம்பரிய உணவுகளை அறிந்து கொண்டோம். அசோகா, சந்திரகலா, டிகிரி காபி, கடப்பா, மராத்தியர்களின் மட்டன் கோலா என அனைத்து உணவுகளின் செய்முறைகளை செய்து காட்டினர். பாரம்பரியத்தை காக்கும் வகையில் அனைத்தையும் ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி' எனக் கூறினார்.
இதையும் படிங்க: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31 வரை நீதிமன்றக் காவல்!