மயிலாடுதுறை: நெகிழியால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் மயிலாடுதுறை நகராட்சி சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான நெகிழி விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான சுவர் ஓவியப் போட்டி, டாக்டர் வரதாச்சாரியார் நகரப் பூங்காவில் நேற்று (பிப்.17) நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கோயம்புத்தூர், சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 105க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்று, நெகிழியால் கடல் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பாதிப்பு, கால்நடைகள் பாதிப்பு, நெகிழியைத் தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.
இந்த போட்டியில், மயிலாடுதுறை அன்பகம் குழந்தைகள் காப்பகத்தில், சிறு வயது முதல் வளர்ந்து வரும் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவி லட்சுமி, மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஓவியத்தை, தனது இரண்டு கால்களைப் பயன்படுத்தி வரைந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாணவி தனது கால்களைப் பயன்படுத்தி வரைந்த ஓவியத்தை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து, அவரை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்ற சுவர் ஓவியப் போட்டியில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்கள் வரைந்த சுவரோவியங்களை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இப்போட்டியில், மக்கள் பயன்படுத்தும் நெகிழி மண்ணில் கலந்து, கண்ணுக்குத் தெரியாத வகையில் உணவில் சேர்வதால், கருவில் வளரும் குழந்தை பாதிக்கப்படுவதை விளக்கும் வகையில், ஓவியம் வரைந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவி விஷாலி முதல் பரிசினை பெற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மிதிவண்டிகளை பரிசாக வழங்கினார். மேலும், கால்களைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி வரைந்த ஓவியத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அவரை பாராட்டி சிறப்பு பரிசினை வழங்கினார். இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் நெகிழி விழிப்புணர்வு குறித்து, தப்பாட்டக் குழுவினர் பாடல் பாடி தப்பாட்டம் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கோட்டாட்சியர் யுரேகா, நகராட்சித் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!