சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி உயர் அதிகாரிகளுடன் நேற்று (செப்.18) 3 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், துறையின் செயல்பாடுகள் குறித்து இன்றும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் மதுமதி, பள்ளி கல்லூரி இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் கடந்து சில மாதங்களாக பள்ளிகளில் நடைபெற்று வரக்கூடிய பல்வேறு சர்ச்சை நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய சர்ச்சை விவகாரம் போன்ற நிகழ்ச்சி மீண்டும் எந்த ஒரு பள்ளியிலும் நடைபெறக்கூடாது எனவும் இது போன்ற சர்ச்சைக்குரிய நபர்களை பள்ளிகளுக்கு அழைக்கவே கூடாது எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: மகாவிஷ்ணுவை அசோக் நகர் அரசுப் பள்ளிக்கு பேச அழைத்தது யார்? துறை இயக்குநரின் அறிக்கை கூறுவது என்ன?
மேலும் பள்ளிகளில் மாணவர்களிடம் பேசுவதற்கு யாரை அனுமதிக்கலாம், அதற்கு அனுமதியை யாரிடம் பெற வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் ஆய்வு செய்துள்ளனர். மானியக் கோரிக்கை அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, பள்ளி அளவிலான புகார்கள், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை கம்பிகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தியது, மேலூரில் பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியது, தென் மாவட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறக்கூடிய மோதல்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.