சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10 பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் கலை, அறிவியியல் பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு பட்டம் வழங்கப்படுகிறது.
ஆனால், ஒவ்வொரு பலகலைக்கழகமும் ஓரு குறிப்பிட்ட நாட்களில் வகுப்புகளை தொடங்கி தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றனர். இதனால் ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் முதுகலைப் படிப்புகளில் வேறு பல்கலைக்கழகத்தில் சேர்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் வகுப்புகளை துவக்கி, தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என தெரிவிதிருந்தார்.
இந்த நிலையில், கல்லூரிக்கல்வி இயக்குனர் கார்மேகம் சென்னை, அழகப்பா, பெரியார், பாரதியார், மதுரை காமராஜர், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரானார், அண்ணாமலை, திருவள்ளுவர், அன்னை தெரசா ஆகிய பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இணைவு பெற்ற பல்கலைக்கழகங்கள் மூலமாக கல்லூரிக்கு, கல்லூரி மாறுபடும் வகையில் கல்லூரி வேலை நாங்கள், தேர்வு நாள்கள் மற்றும் பருவ விடுமுறை ஆகியன கடைபிடிக்கப்படுகின்றன.
மேலும், மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் பருவத் தேர்வுகள் தனித்தனியாக வெவ்வேறு நாள்களில் நடத்தப்படுகின்றன. இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முறையான கல்விச் சூழல் பாதிக்கப்படுவதோடு, பாடத்திட்டம் மாணவர்களுக்கும் பயன்தரும் பிற நிகழ்வுகளைக் கல்லூரிகளுக்கு உள்ளும் வெளியிலும் நிகழ்த்த திட்டமிடுவதில் தேவையற்ற குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும் நிலவுகின்றன.
இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடத் தேர்வுகள் வெல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட வெவ்வேறு கல்லூரிகளில் ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற இடைவெளிகளில் நடத்தப்படுவதாலும், தேர்வு முடிவுகள் மிகவும் தாமதமாக வெளியிடப்படுவதாலும் முதுகலை மற்றும் முது அறிவியல் மாணவர் சேர்க்கையில் விரைந்து சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோரும் தொடர்ந்து பதற்றத்திலேயே தவித்திருக்கும் குழல் நிலவுகிறது.
மேல் படிப்பிற்கும், பணிவாய்ப்புகளுக்கும் குறித்த காலத்திற்குள் செல்ல முடியாத நெருக்கடியும் உருவாகிறது. இவற்றைத் தவிர்ப்பதற்கு பெரிய இடைவெளிகள் இல்லாத பொதுவான வரைவு கால அட்டவணை தேவைப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் பின்பற்றும் வகையில், 2024-25 கல்வியாண்டிற்காக வரைவு கால அட்டவணை தயாரிக்க கல்வியாளர்கள் குழு நியமிக்கப்பட்டு, அவர்களது பரிந்துரையின் அடிப்படையில் ஒரு பொதுவான வரைவுக் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித் திட்டம், ஆண்டு விழா, விளையாட்டு விழா, பட்டமளிப்பு விழா முதலிய பல்வேறு நிகழ்வுகளையும் 2024-25ஆம் கல்வியாண்டில் செயல்படுத்துவதற்கு அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், 2024-25ஆம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3ஆம் தேதி துவங்கும் எனவும், வரும் ஆண்டுகளில் 1, 3, 5 ஆகிய பருவத்திற்கான தேர்வுகள் அக்டோபர் 31ஆம் தேதி அன்று துவங்கி நவம்பர் 25ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு அதே நவம்பர் நிறைவடையும் எனவும், தேர்வு முடிவுகள் டிசம்பர் 16 அல்லது அதற்கு முன்பு வெளியிடப்படும்.
மேலும் 2, 4, 6 ஆகிய பருவத்திற்கான தேர்வுகள் ஏப்ரல் 15 தொடங்கி மே 10ஆம் தேதி முடிவடையும். மே 31ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரக்கூடிய ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த அட்டவணையை பின்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TNUHDB வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு! - TNUHDB House Apply