சென்னை: கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம், தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தை இயக்கியுள்ளார். நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்து வருகிறது.
ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. ருமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகி உள்ளது.
படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களை கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி இருக்கிறது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கோட்' படத்தின் 2வது சிங்கிள் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் வெளியீடு! - the goat 2nd single released