தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.21) தொடங்கியது. இதில் நடிகை நித்யா மேனன், காமெடி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
திருச்செந்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாண்டிராஜ் கூறுகையில், "இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கான முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த படம் எனது பாணியில் குடும்பப் படமாக அமையும்.
இதையும் படிங்க: நான் ஆஸ்கர் விருது வென்றதை தற்போது எவரும் கண்டு கொள்வதில்லை... மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!
இளைஞர்களை கவரும் குடும்பக் கதை: இளைஞர்களுக்கு பிடிக்கும் படமாகவும் இது இருக்கும். இந்த படம்தான்
விஜய் சேதுபதியும், நானும் சேர்ந்து உருவாக்கும் முதல் படம். நிச்சயம் இது பெரிய அளவில் வெற்றி பெறும்.
இந்த கதைக்கு பொருத்தமானவர் விஜய் சேதுபதி தான். தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனனுக்கு வாழ்த்துக்கள். எனது படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு அந்த விருது அவருக்கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் கேரக்டர்களாகவே நிறைய சர்ப்ரைஸ் உள்ளது. அது குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்.
விஜய் அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவார்: விஜய் அரசியலுக்குள் இறங்கியுள்ளார் முதலில் எனது வாழ்த்துக்கள். அவர் நிச்சயம் அரசியலில் வெற்றி பெறுவார். நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எடுத்த படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் பசங்க படத்தை தான் எடுப்பேன்.
சினிமாவை சினிமாவாக பார்க்கிறேன்: தற்போது வெளியான லப்பர் பந்து, வாழை, நந்தன் போன்ற படங்களும் சரி கோட், வேட்டையன் போன்ற படங்களும் சரி அனைத்தும் ஆரோக்கியமான படங்களாக உள்ளது. அனைவரும் நல் படங்களை தருகின்றனர் அதில் மகிழ்ச்சி" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்