சென்னை: மனிதர்கள் நாய் கடிக்கும் ஆளாவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் 24 மணி நேரமும் நாய்க்கடி மற்றும் பாம்பு கடித்தலுக்கு மருந்து கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,"விலங்குகள் கடித்தல் ஒரு குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார பிரச்சனையாக தொடர்கிறது. தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 பேரை நாய் கடித்ததில், 18 பேர் ரேபிஸ் நோய் ஏற்பட்டு இறந்தனர். 2024ஆம் ஆண்டில் ஜூன் மாதம் வரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 782 பேரை நாய் கடித்ததில் 22 பேர் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர்.
மேலும், 2023ஆம் ஆண்டில் 19,795 பேரும், 2024ஆம் ஆண்டு ஜூன் வரையில் 7,310 பேரும் பாம்பு கடிக்கும் ஆளானதாக பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ஆம் தேதி உலக பாம்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் 24 மணி பாம்பு கடி எதிர்ப்பு மருந்துகள் (ASV) கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எந்த நேரத்திலும் குறைந்தபட்சம் 10 குப்பிகள் ASV இருப்பு வைத்திருக்க வேண்டும். 108 சேவைகள் மூலம் மூன்றாம் நிலை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கும் முன், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களுக்கு பாம்பு கடித்து வருபவர்களுக்கு பாம்பு கடிக்கு ASV வழங்கப்பட வேண்டும். இந்த மருந்தைப் போடுவதற்கு முன்னர் டெஸ்ட் செய்வதற்கு மருந்து செலுத்த தேவையில்லை.
ரேபிஸ் இறப்பை தடுப்பதற்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் 24 மணி நேரமும் ARV கிடைப்பதை உறுதி செய்யவும். எந்த நேரத்திலும் குறைந்தபட்சம் 20 ARV குப்பிகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். அனைத்து நாய்க்கடி நிகழ்வுகளுக்கும் ARV மருந்தை எந்த தயக்கமும் இல்லாமல் செலுத்த வேண்டும். இரவு நேரங்களில் கூட ARV-ஐ நிர்வகிப்பதற்கு எந்தவிதமான மறுப்பும் இல்லாமல் போட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்” - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!