சென்னை: தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் செயல்படும் தனியார் உர தொழிற்சாலை, சட்ட விரோதமாக கழிவுகளை வெளியேற்றுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; ஆறுமுகநேரியில் ஏராளமானோர் உப்பளம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எங்கள் உப்பளத்துக்கு அருகே, தனியார் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், காஸ்டிக் சோடா, ஹைட்ரோகுளோரிக் அமிலம், திரவ குளோரின், ட்ரைக்ளோரோ எத்திலீன், யூடாக்ஸ், பெரிக் குளோரைடு, சோடியம் ஹைபோகுளோரைட், அம்மோனியம் பை கார்பனைட், சோடியம் பை கார்பனைட், சிந்தெடிக் ஐரான் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த ஆலை அப்பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, உப்பு நீரை எடுக்கிறது. மேலும், இந்த உரம் தயாரிக்கும் ஆலை கடந்த 2012ஆம் ஆண்டு இரும்பு ஆக்சைடு மற்றும் இல்மனைட் லீச் கழிவுகளை சட்டவிரோதமாக வெளியேற்றியது.
இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; உரிமம் தற்காலிக ரத்து!
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் உடனே புகார் செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட உப்பள உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுத்து, உர ஆலை நிர்வாகத்தினர் சமரசம் செய்து கொண்டனர். பின்னர், கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளிலும் இதேபோல் கழிவுகளை வெளியேற்றியது.
உப்புத் தொழிலுக்கு உப்பு நீர் தான் பிரதான மூலப்பொருளாகும். ஆனால், இதுபோல ரசாயனக் கழிவுகளை நிலத்தில் கம்பெனி வெளியிடுவதால், உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் சேமிப்பு ஆவியாதல் தொட்டி ஒன்றை இந்த உர ஆலை அமைத்துள்ளது. இதனாலும், அப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. உப்புத் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கழிவுநீர் தொட்டியை மூட உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஆலையில் ஆய்வு செய்யவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், வட்டார வருவாய் அலுவலர், புகாருக்குள்ளான உர தொழிற்சாலை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்