மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014 இல் அளித்த ரூ. 4.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசம் மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த அக். 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கர் சிலைக்கு அணிவிப்பதற்காக, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முத்துராமலிங்கர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கடந்த அக். 25 ஆம் தேதி தங்க கவசத்தை பெற்றுச் சென்றனர்.
அதனை தொடர்ந்து, தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்று முடிந்த நிலையில், மீண்டும் அதனை மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இன்று ஒப்படைத்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 'விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு லாபம்'.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை..?
பிறகு செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், ''நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்று முடிந்தாலும் கூட, அது குறித்து நோ கமெண்ட்ஸ் தான். அவர் இப்போதுதான் அறிமுகம் ஆகி உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். அதிமுகவை பொறுத்தவரை அனைத்து மாவட்ட செயலாளர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள். ஆகையால் அவர்கள் குறித்து நடவடிக்கை என்பதற்கெல்லாம் இடமில்லை'' என்றார்.
தொடர்ந்து பேசியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளை விட, தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறார். நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். ஆகையால் கூட்டத்திற்கு முன்பு யூகத்தின் அடிப்படையில் நாம் பேச முடியாது என கூறினார்.
இந்த பேட்டியின் போது, முத்துராமலிங்கர் சிலையின் தங்கக் கவசம் பாதுகாப்பாக வைக்கப்படும் வங்கியின் பெயரை மறந்து அருகில் இருந்த செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமாரிடம் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டது நகைப்பை ஏற்படுத்தியது. காரணம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த வங்கியில் தங்க கவசத்தை பெற்று திரும்ப ஒப்படைக்கும் முக்கியமான பொறுப்பில் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்