திண்டுக்கல்: பழனியில் இன்று நடைபெற உள்ள ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ பந்தலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பழனியில் 2 நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்.
இந்த மாநாட்டிற்காக வெளிநாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் முருகன் தொடர்பான கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். முருகனின் புகழ் பரப்பிக் கொண்டும், சேவையாற்றிக் கொண்டிருக்கும் 16 பேருக்கு ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். மேலும், இந்த மாநாட்டில் 250க்கும் மேற்பட்டோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்த மாநாட்டின் முகப்பில் உள்ள 8 நுழைவாயில்களில் ஆறுபடை முருகன் சிலைகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி, மருத்துவ வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு பந்தலில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தில், 3டி திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரையில் முருகனின் 6 நிமிடம் பாடல் காட்சிகள், அரங்கத்தில் உள்ள அறுபடை முருகனின் சிலைகள் குறித்த கேமரா பதிவுகள், மாநாடு முடிந்து ஒரு வாரம் வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையானுக்கே போட்டி..! 25 கிலோ நகையுடன் திருமலையில் உலா வந்த குடும்பம்!