திண்டுக்கல்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், இன்று மாலையுடன் பிரச்சாரத்திற்கான கால அவகாசம் முடிவதால், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று முதல் தேர்தல் முடியும் வரை சுமார் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் எதுவும் திறக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு, அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா, தனது இறுதிகட்ட பரப்புரையை மேற்கொண்டிருந்த போது, திண்டுக்கல் கொட்டப்பட்டி சாலையில் தேர்தல் விதியை மீறி ஒரு குடோனில் மது விற்பனை செய்து கொண்டிருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைக் கண்ட வேட்பாளர் திலகபாமா, உடனடியாக வாகனத்திலிருந்து கீழே இறங்கி குடோனுக்குள்ளே நுழைந்து, மது விற்பனை செய்த விற்பனையாளர்களைச் சிறை பிடித்து, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
அதையடுத்து, உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு, “திண்டுக்கல்லில் அரசு மதுபானக் கடை விடுமுறை என்றாலும் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. ஆகையால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அந்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த குடோனை சீல் வைத்து, விற்பனையாளர் சேசு என்பவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் திலகபாமா, “திண்டுக்கல் தொகுதியில் டாஸ்மாக் என்ற பேரில் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்குத் தெரியாமல் டாஸ்மாக் கடை எப்படி திறக்கப்பட்டது? தற்போது, பரப்புரையின் போது கடையிலிருந்து சிலர் குடித்துவிட்டு வருவதைக் கண்டதும், உடனடியாக கடைக்குள் சென்று விற்பனையாளரை பூட்டி வைத்துள்ளோம். கடைக்கு உரிமமும் கிடையாது, அதுமட்டுமின்றி இன்று கடையைத் திறக்கவும் கூடாது.
இதுபோன்ற கடைகள், மது விற்பனைக்கு மட்டுமல்ல, பணப்பட்டுவாடா செய்வதற்கான இடமாக பயன்படுகிறது. மேலும், நேற்று பணப்பட்டுவாடா செய்ததை, இன்று சாராயக்கடை மூலமாக வசூல் செய்ய முடிவெடுத்துவிட்டார்கள். மக்களை 3 நாட்களும் போதையிலேயே வைத்திருந்து, அவர்களுக்கான ஓட்டாக மாற்றுவதற்கான திட்டமிடல். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. மேலும், இப்பகுதியின் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். கடை உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும்" என்றார்.