திண்டுக்கல்: திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக முகமது முபாரக் போட்டியிடுகிறார். இந்த நிலையில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழா, அதிமுக சார்பாக, திண்டுக்கல் நத்தம் சாலையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்விற்கு, அதிமுக சார்பில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் வந்தனர். இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், வேடசந்துார் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்று, எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக முகமது முபாரக்கை அறிமுகம் செய்ய இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அபிராமி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பாரதி முருகன் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். இதனையடுத்து, அதே முன் இருக்கையில் ஒன்றிய துணைச் செயலாளர் பாலமுருகன் அமர்ந்தார். கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பாரதி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலமுருகனை பின் இருக்கைக்குச் சென்று அமரும்படி தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய துணைச் செயலாளர் பாலமுருகன், “நீ மட்டும் தான் அதிமுகவில் இருக்கிறாயா, நானும் அதிமுக பொறுப்பில் தான் இருக்கிறோம்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில், கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: தெலங்கானா எம்எல்சி கவிதாவின் காவல் நீட்டிப்பு! - Kavitha Custody Extend