சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 1999-ஆம் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பு.த.இளங்கோவன். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இவர், 2004 தேர்தலில் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாமகவில் இருந்து விலகினார்.
பின்னர் கடந்த 2014-ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைத்துகொண்ட அவருக்கு 2016 தேர்தலில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனாலும், அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.
தற்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பு.த.இளங்கோவன், ஜெயலலிதா மறைவுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் என இரண்டாக அதிமுக பிளவுபட்ட பிறகு தன்னை யாருக்கான ஆதரவாளர் என்று காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்து வந்த நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துகொண்டார்.
திமுகவில் இணைந்த பிறகு பேசிய பு.த.இளங்கோவன், "அதிமுகவில் உரிய மரியாதை இல்லாத காரணத்தால் தொடர்ந்து நீடிக்க விரும்பாமல் திமுவில் தன்னை இணைத்து கொள்வதாகவும், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே மரியாதை ஏற்படுத்தி கொண்டு இருப்பவர். சிறந்த நிர்வாகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்று கூறினார்.
இதே போல், இந்த நிகழ்வில் கடலூர், தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, பாமக உள்பட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஒன்றியம், வட்டம் என பல்வேறு பொறுப்புகளில் உள்ள நூற்றுக்கணக்கானோர் தங்களை திமுகவில் இணைத்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, சி.வி.கணேசன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீது ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்த திமுக..