தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) 331 மில்லிமீட்டர் மழை பெழிந்தது. கடந்த நான்கு நாட்களாக அரூர் பகுதியில் மழைப்பொழிவு அதிகரித்து வருவதால், ஆரூர் பகுதியை ஒட்டி உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரூர் கலசப்பாடி மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல், மண் சாலையில் மக்கள் பயணித்து வருகின்றனர். கடந்த நான்கு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக அந்த சாலையில் காட்டாற்று வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் கிராம மக்கள் அரூர் பகுதிக்கு வராமல் தங்களது கிராமங்களையே முடங்கியுள்ளனர்.
இவர்களது வாழ்வாதாரமே விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாகும். இந்த கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலை விற்பனை செய்து தங்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த மழையின் காரணமாக அரூர் செல்லும் சாலையில் வெள்ள ஓடுவதால், 3,500 லிட்டர் பால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் வீணானது.
இந்நிலையில் இன்று அரூர் செல்லும் சாலையில் வெள்ளம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் வெள்ள பெருக்கின் இரண்டு புறமும் சாலையை இணைக்குமாறு கயிறு கட்டி, அந்த கயிறை பிடித்தவாறு 2கேன்களில் பாலை விற்பனைக்கு எடுத்து சென்றன.
இதையும் படிங்க: ஐந்து மாதம் கூட தாங்கல! மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் - பொதுப்பணித்துறை விளக்கம்!
இந்த மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இது போன்று ஆபத்தான வெள்ள பாதையை கடந்து தங்களது வாழ்வாதார பால் விற்பனை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் இது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கென பாதுகாப்பான சாலை அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே தருமபுரியின் எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாகவும், நீர் நிலையாகும் இருக்கும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 28,000 கன அடியாக அதிகரித்ததுள்ளது. நேற்று 5,000 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 14,000 கனஅடியாக அதிகரித்தது. அதுவே காலை 8 மணி அளவில் நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாகவும், தற்போது 12 நிலவரப்படி நீர்வரத்து 28,000 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
இதனால், மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க பரிசல் இயக்க தடைவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் வருகையை தொடர்ந்து, இங்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.