தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கு அறையை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று (ஏப்.01) நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து ராஜாபேட்டை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது. இதில், அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், வேட்பு மனு மீதான பரிசீலனையின்போது 653 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 1,058 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
இந்நிலையில், அந்தந்த தொகுதியில் போட்டியிட உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த வகையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தருமபுரி பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள், செட்டிக்கரை பகுதியில் உள்ள தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி அந்த அறைகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வாகனங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் எந்த வழியாக கொண்டு வரப்படுகிறது என்பது குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறையில் இருந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைக்கு இடைப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து தருமபுரி மாவட்டம் ராஜாபேட்டை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின்போது தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரான்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராட்ச சேகர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பாலக்கோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.