மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக உள்ளவர், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி காசிக்கு ரதயாத்திரை சென்று, அங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக சிலர் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு, தருமபுரம் ஆதீனத்தின் உதவியாளர் செந்திலுடன் கூட்டாக மிரட்டி பணம் கேட்டதாக புகார் எழுந்தது.
இதனால் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், செம்பனார் கோயில் கலைமகள் கல்வி நிறுவனத் தாளாளர் குடியரசு, வினோத், விக்னேஷ்வரன், ஶ்ரீநிவாஸ் உள்ளிட்ட நான்கு பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், செய்யூரைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த திருக்கடையூர் விஜயகுமார் என்பவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தவறுதலாக பெயர் சேர்க்கப்பட்டு விட்டதாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
ஆதீனம் உதவியாளர் செந்திலை விடுவிக்கக் கோரி சமூக வலைத்தளத்தில் வந்த கடிதம் போலியானது என்று விருத்தகிரி தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்யப்படாத நிலையில், தருமபுரம் ஆதீன மடத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை சுவர்களில் காட்சியளிக்கும் இந்தியன் தாத்தா.. திரையில் எப்போது?