சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. தற்போது இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதில் முதல் கட்டமாக, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்குச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் அங்கு பணியில் இருக்கும் காவலர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் வாக்குமூலங்களை பெற்ற சிபிசிஐடி அதிகாரிகள், அடுத்தகட்டமாக மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி விரைந்துள்ளார். டிஜிபி சங்கர் ஜிவால் கள்ளக்குறிச்சி சென்ற பின்பு சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எத்தனால் என்ற பொருள் சாராயத்தில் சேர்க்கப்பட்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த எத்தனால் எங்கு வாங்கப்பட்டது? யார் விற்றார்கள்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும்,இந்த கள்ளச்சாராய வழக்கை எந்த கோணத்தில் விசாரணை செய்ய வேண்டும் என சிபிசிஐடி அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில், இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என சிபிசிஐடி போலீசார் சட்ட ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தெருவுக்கு ஒரு சடலம் : கள்ளச்சாராயத்தால் சீரழிந்த கள்ளக்குறிச்சி! நடந்தது என்ன?