சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றி வரும் காவலர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என டிஜிபி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்த நிலையில், இந்த இடமாற்றம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, ஐஜி முதல் காவலர்கள் வரை தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், வடக்கு மண்டல ஐ.ஜி ஆக இருந்த கண்ணன் தெற்கு மண்டலத்திற்கும், தெற்கு மண்டல ஐ.ஜி ஆக இருந்த நரேந்திரன் வடக்கு மண்டலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 62 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 35 காவலர்களை கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வேலூர் மாவட்டம் காட்பாடி துணை கண்காணிப்பாளராக இருந்த பழனி, வேலூர் உளவுத்துறை பிரிவு துணை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடியாத்தம் துணை கண்காணிப்பாளராக இருந்த ராமமூர்த்தி, ஆம்பூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்பூர் துணை கண்காணிப்பாளராக இருந்த சரவணண், காட்பாடி துணை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த ரவிச்சந்திரன், குடியாத்தம் துணை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் புதிய மீன் அங்காடிக்கு கூடுதலாக ரூ.4.96 கோடி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!