சென்னை: 1959ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் வீரமரணம் அடைந்த தமிழ்நாடு காவல் துறை மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துணை இராணுவப்படையினருக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அருண், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி மற்றும் வீரமரணம் அடைந்த காவல் துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக 144 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தருமபுரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு.. 63 குண்டுகள் முழங்க மரியாதை!
தொடர்ந்து மறைந்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் கூறியதாவது, “அக்டோபர் 21 ஆம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் Hot Spring என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படைக் (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து பதினாறாயிரம் அடி உயரத்தில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூறுகிறோம். கடற்கரையானாலும், பனிமலைச் சிகரமானாலும் காவலர் பணி இடர் நிறைந்தது.
இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டுப் பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 213 பேர். மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம். அவர்களின் வீரத் தியாகம் வீண்போகாது என்று இந்த காலலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம்” இவ்வாறு வர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்