கடலூர்: சிதம்பரத்தில் உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ஆனித் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனம் கடந்த ஜூலை 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து விழா நடைபெறும் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் மூலவர் வீதி உலா வருவது வழக்கம்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை காலை தேரோட்டமும், நாளை மறுநாள் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவையொட்டி, பல்வேறு பூஜைகள் நடைபெற இருப்பதால் இன்று முதல் வருகிற 13ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறிய இடமான நடராஜர் இருக்கும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது சிரமமாக இருக்கும் எனவும், அதனால் பூஜைகளுக்கு இடையூறு ஏற்படும் எனவும், பூஜைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது நீதிபதிகள், அரசாணை இருக்கும்போது கனகசபை மீது ஏறக்கூடாது என சொல்வதற்கு உரிமை இல்லை. தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் எனவும், அதை தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே தீட்சிதர்கள் கனகசபை மீது ஏற இன்று அனுமதி இல்லை என அறிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று காலை 6 மணியளவில் பூஜை முடிந்த பிறகு சிறிது நேரம் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தேர் திருவிழாவையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது பூஜைகளின் இடைவேளையின் போது பக்தர்கள் கனசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதை கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கனகசபை அருகே இருந்தபடி கண்காணித்து வருகின்றனர். தேர் திருவிழா மற்றும் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு சிதம்பரம் பகுதிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கடலூர் அதிமுக நிர்வாகி படுகொலை; மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி! - EPS SLAMS DMK GOVT