சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றி அமைக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை நேற்று ஆளுநர் மாளிகை ஏற்றதாக அறிவித்தது. இந்த நிலையில், இன்று புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மேலும், உதயநிதி ஸ்டாலின் இலாகா மாற்றம் இல்லாமல் துணை முதலமைச்சரானார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன் மற்றும் எஸ்.எம்.நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அமைச்சரின் துறைகள்: இன்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களாக பதவியேற்ற கோவி செழியனுக்கு உயர் கல்வித்துறையும், ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பால்வளத்துறை அமைச்சராக இருந்து நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ள ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலன் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - செய்தி வெளியீடு#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR @CMOTamilnadu @mkstalin @AppavuSpeaker @mp_saminathan pic.twitter.com/W4H1dzCVMv
— TN DIPR (@TNDIPRNEWS) September 29, 2024
மேலும், அரசு தலைமைக் கொறாடாவாக இருந்த கோவி செழியன் அமைச்சராக பதவி ஏற்ற நிலையில், குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கா.ராமசந்திரன், அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலாளர் கி.சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதிலளிப்பேன்"- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
அமைச்சர்களின் மாற்றம் செய்யப்பட்ட பதவிகள்:
அமைச்சர்களின் பெயர்கள் | பதவி வகித்த துறைகள்/இலாகா | மாற்றம் செய்யப்பட்ட துறைகள்/ இலாகா |
க. பொன்முடி | உயர் கல்வித்துறை | வனத்துறை அமைச்சர் |
தங்கம் தென்னரசு | நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை | நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் |
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை | பால்வளத் துறை அமைச்சர் |
சிவ.வீ. மெய்யநாதன் | சுற்றுச்சூழல் துறை | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் |
மா. மதிவேந்தன் | வனத்துறை | ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் |
என். கயல்விழி செல்வராஜ் | ஆதிதிராவிடர் நலத்துறை | மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் |
இப்பதவியேற்பு விழாவின்போது, சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், புதியதாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர், மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்