தஞ்சாவூர்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவ.07) தஞ்சாவூர், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 14,525 பயனாளிகளுக்கு ரூ.154 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தாட்கோ, வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம், தோட்டக்கலை துறை, தொழிலாளர் நலத்துறை, வீட்டு வசதி துறை என மொத்தம் 17 துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். மேலும், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண் விற்பனை துறை சார்பில் ரூ.43 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்து, பொதுப்பணித்துறை சார்பில் ரூ.28 கோடியே 26 லட்சம் மதிப்பில் இரண்டு பணிகளுக்கு அடிக்கலும் நாட்டியுள்ளார்.
பின்னர், நிகழ்ச்சி மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு கடந்த மூன்றரை ஆண்டுகளில் 95 ஆயிரத்து 176 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக்கடன் இணைப்புகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்திய அளவில் கல்வி, சுகாதாரம், நகர்புர மேம்பாடு, மகளிர் பாதுகாப்பு, மகளிர் முன்னேற்றம் என 13 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றது என்று ஒன்றிய அரசினுடைய நிதி ஆயோக் அமைப்பின் பட்டியல் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: "ஒவ்வொருவரும் அரசின் பிராண்ட் அம்பாசிடராக செயல்பட வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!
அதேபோல, தொழில் துறையில் சிறந்து விளங்குகின்ற மாநிலம் என்ற பட்டியலிலும் நம்முடைய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களை, சாதனைகளை உற்றார் உறவினர்கள் என மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். திராவிட மாடல் அரசினுடைய முகங்களே மக்களாகிய நீங்கள்தான். நீங்கள்தான் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிடர்ஸ்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியின் போது உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.44 கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள 127 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.28.26 கோடி மதிப்பிலான புதிய கட்டடப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினோம்.
— Udhay (@Udhaystalin) November 7, 2024
மேலும், கிட்டத்தட்ட 14,525 பயனாளிகளுக்கு… pic.twitter.com/az4fXaceep
முன்னதாக, தஞ்சைக்கு வருகை புரிந்த துணை முதலமைச்சரை வரவேற்பதற்காக மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சி பணியாளர்கள் காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களை சந்தித்த போது, சிலர் தங்கள் கோரிக்கை மற்றும் மனுக்களை அவரிடம் வழங்கினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்