கோயம்புத்தூர்: திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று (டிச.10) காலமானார். இவர் கடந்த பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமநாதபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இரா.மோகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 1980-ல் கோவை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா.மோகன், 1989-ல் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி அஞ்சலி: இந்த நிலையில் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மூத்த உறுப்பினர்கள் உடன் இருந்தனர். பின்னர் இரா.மோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கலைஞர் கருணாநிதியின் தம்பியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பருமான இரா.மோகனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் 13 வயதிலேயே திமுகவிற்கான பணிகளில் ஈடுபட்டவர்.
இதையும் படிங்க: மீண்டும் பதறிய பல்லடம்... வீட்டில் சடலமாக கிடந்த கணவன், மனைவி.. கதறும் பிள்ளைகள்..!
மேலும் எமர்ஜென்சி காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறை கொடுமையை அனுபவித்தவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டவர். 7 வருடமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கோவை வரும் போதெல்லாம் இரா.மோகனை சந்தித்து நலம் விசாரித்துவிட்டுத் தான் செல்வார். இன்று ஒரு மிகப்பெரிய துயரமான நாள், அவருடைய குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உதயநிதி தெரிவித்தார்.