சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு என்பது கட்டுக்குள் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் சென்னை, அரசு இராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 3 இலட்சமாவது பயனாளியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 என்னும் திட்டத்தை 2021 டிசம்பர் 18 ந் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் எந்த சாலைகளில் விபத்துகள் நேர்ந்தாலும் அவர்களுக்கு உடனடியாக முதல் 48 மணிநேரத்தில் ரூ.1 லட்சம் அரசு உதவி என்கின்ற வகையில் தந்து அவர்களது உயிர்களை காப்பாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் 3 இலட்சமாவது பயனாளியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
டெங்குவினால் ஒரு சிறுமியின் இறப்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறும்போது, மருத்துவத்துறை 41 மாத காலமாக சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார், அவர் அறிக்கை விடும்போதெல்லாம் தொடர்ந்து அவருக்கு பதில் சொல்லி வருகிறேன். மருந்து இல்லை என்றால் எந்த மருத்துவமனையில் இல்லை என்று கேட்டோம், சேலம் என்றார், சொன்ன உடனேயே சேலத்திற்கு சென்று எந்த மருந்து இல்லை என்றாரோ அந்த மருந்து இருப்பை காண்பித்தோம்.
இதையும் படிங்க: நாளை தமிழக பள்ளிக் கல்வி துறையின் ஆய்வு கூட்டம்; நிறைவேறுமா ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு..?
எதிர்கட்சித் தலைவரோ அல்லது அவருடைய சார்புடையவரோ தமிழ்நாட்டில் உள்ள எந்த மருத்துவமனைக்கும் சென்று ஆய்வு செய்துக் கொள்ளவும், உயிர்காக்கும் மருந்துகள் எந்தெந்த மருத்துவமனைகளில் உள்ளது என்று தெரிந்து கொள்ளவும். உண்மைத் தன்மை தெரிந்து கொள்வது அவர்களது நோக்கமல்ல. இந்த துறையின் மீது புழுதி வாரித் தூற்றுவது, இந்த துறையின் நோக்கங்களை கெடுக்கும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் டெங்கு காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 வருடங்களில் இந்த ஆண்டு மட்டுமே குறைவான டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 2012 ஆம் ஆண்டு 66 டெங்கு இறப்பும், 2017 ஆம் ஆண்டு 65 டெங்கு இறப்பும், இந்த ஆண்டுதான் 8 என்கின்ற அளவில் இருக்கின்றது. டெங்கு மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு இருந்துக் கொண்டிருக்கிறது. இதுகூட தெரிந்துக் கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடுவது ஏற்புடையதாக தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் கேட்டுக் கொள்வது, இந்த துறை குறித்து அவரிடம் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்