டெல்லி: சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு குடிசைத் தொழில், சிறுதொழில் மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரசு தலைமை கொறடா செழியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, இந்த விழா மேடையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியபோது, "எவ்வளவோ பிரதமரை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை நாங்கள் பார்த்ததில்லை. திமுகவை ஒழித்திடுவேன் என்கிறார், அது முடியுமா? ஒன்றே ஒன்று சொல்கிறேன், திமுக சாதாரணமான இயக்கம் அல்ல, பல பேர் உயிர்த்தியாகம் செய்து வளர்க்கப்பட்ட இயக்கம்.
இதுவரையில், இந்த திமுக இயக்கத்தை யார் யாரோ ஒழித்திடுவேன் என கூறியதுண்டு. ஆனால், இறுதியில் திமுகவை ஒழித்திடுவேன் எனக் கூறியவர்கள்தான் ஒழிந்து போய் இருக்கிறார்களே தவிர, திமுக எப்போதும் கம்பீரமாகத்தான் நிற்கும். நான் அமைச்சர் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். இல்லையென்றால் பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்” என பேசினார்.
இந்த நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிரட்டுவது போன்று பேசிய வார்த்தைகளை மய்யமாக வைத்து, பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டியதாக, தமிழ்நாடு குடிசைத் தொழில், சிறுதொழில் மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் அமித் மால்வியா, தனது 'X' வலைத்தளப் பக்கத்தில், "சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதை அடுத்து, தமிழக குடிசைத் தொழில், சிறுதொழில் மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசிய பொது உரையில், 'நான் அமைச்சராக இல்லாவிடில், உங்களை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்' என்று பிரதமர் மோடிக்கு எதிராக கூறியுள்ளார்" என்று பதிவிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: "இந்த காரணங்களுக்கு தான் சிஏஏ-வை எதிர்க்கிறோம்" - இஸ்லாமியர்கள், வழக்கறிஞர் கூறுவது என்ன?