சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நேற்று (ஜூன் 22) நடைப்பெற்றது. இதில் பால்வளத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளும், கொள்கை விளக்கக் குறிப்புகளும் வெளியிடப்பட்டன. அப்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலுரை அளித்து பேச துவங்கினார்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: 2024 நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக அமைந்தது. தேர்தலுக்கு முன்னர் 400 தொகுதிக்கு மேல் கைப்பற்றுவோம், நாட்டை பிடிப்போம், நாட்டின் பெயரை இந்தியா என்பதை மாற்றுவோம், அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என சிலர் கொக்கரித்தனர். ஆட்சியை பிடிப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளதோ? அவற்றை எல்லாம் கையில் எடுத்தார்கள். தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றை எதிர்க்கட்சியினர் மீது ஏவிவிட்டு சிலரை மிரட்டி கையகப்படுத்தி பல்வேறு வேலைகளை செய்தனர்.
இந்திய துணைக்கண்டத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்த மண்ணில் வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு, பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டு, எனப் பேச தொடருகையில் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, 'பொய் என்ற வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன். Subject-க்கு வாங்க..!' என்றார்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: நாம் அரசியல் கட்சி, சிறிது அரசியல் பேசி தான் ஆக வேண்டும். நெருக்கடியான தேர்தல் முடிந்து நிற்கிறோம், நீங்கள் கொடுத்த நேரத்தில் பேசி முடித்துவிடுவேன். பேச அனுமதி தாருங்கள்.
சபாநாயகர்: பால்வளத்துறை மானிய கோரிக்கையில் பேசியதற்கு தான் நீங்கள் பதிலளிக்க வேண்டும். அரசியலை தொட்டுக்கொள்ளலாம்; அவ்வளவு தான். அதைத் தாண்டி பேசக்கூடாது. வெளி மேடையில் பேசுவதைப்போல், சட்டப்பேரவையில் பேசுவது நாகரிகமற்றது. சபைக்கு ஒரு நாகரிகம் உள்ளது. நாகரிகத்தை தாண்டி பேசக்கூடாது.
பால்வளத்துறை அமைச்சர்: நான் எதையும் தாண்டி பேசவில்லை.
சபாநாயகர்: நம்முடைய தலைவர் குறித்தும் சாதனைகள் குறித்தும் பேசுங்கள். ஆனால், அதைத் தாண்டி எதையும் பேசாதீர்கள்.
பால்வளத்துறை அமைச்சர்: அவை நாகரிகம் மீறி நான் பேசமாட்டேன்.
சபாநாயகர்: Subject-க்கு வாங்க மூத்த அமைச்சர்கள் பதில் கூறி இருக்கிறார்கள். அவர்கள் Subject-யைத் தாண்டவில்லை. அதை மனதில் வைத்து பேசுங்க.
பால்வளத்துறை அமைச்சர்: மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 142 வது இடம். ஆனால், பொய் பிரச்சாரங்கள், வெறுப்பு பிரச்சாரங்களில் இந்தியா முதலிடம். அதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை உள்ளது.
சபாநாயகர்: அவையில் 'பொய்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது. உண்மைக்கு புறம்பாக என்றுதான் கூற வேண்டும். Subject-க்கு வாங்க..அவை வேண்டாம்.
Subject தாண்டி நீங்கள் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க தான் போகிறேன். மூத்த அமைச்சர்கள் எவ்வளவு பண்பாக பதில் கூறி இருக்கிறார்கள். அந்த இடத்திற்கு வாங்க தயவு செய்து, வீண் பிரச்சனை தேவையில்லை. சபையில் என்னப் பேச வேண்டும் என ஒரு நாகரிகம் உள்ளது. அதை மட்டும் பேசுங்கள் என்றார்.
இப்படி இருவருக்கும் இடையை காரசார விவதாம் நடைப்பெற்றது. 'பொய்' என்ற ஒற்றை வார்த்தையை பால்வளத்துறை அமைச்சர் பயன்படுத்தியதால் சபாநாயகருக்கும் அமைச்சருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு": அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு! - Salary hike for co op workers