கோயம்புத்தூர்: தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின் படி, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வந்த நிலையில், நடப்பாண்டில் சுமார் 2.25 லட்சம் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதேபோல், வெள்ளியங்கிரி மலையேறிய 9 பேர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். இந்நிலையில், மே 31ஆம் தேதிக்குப் பின் மலையேற்றத்தற்கு அனுமதியில்லை என வனத்துறையினர் தெரிவித்திருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு போளூவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரன் முன்னிலையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு, வெள்ளியங்கிரி மலையேறும் பாதை மூடி பூட்டப்பட்டது.
மேலும், பக்தர்கள் மலையேற அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. தற்போது சாமி தரிசனத்திற்காக மலையேறிவர்கள் கீழே இறங்கி வர மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் வெள்ளியங்கிரி மலையின் இயற்கை அழகை பலர் ரீல்ஸ் எடுத்து போட்டதால், இந்த ஆண்டு அதிக அளவிலான இளைஞர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், அடுத்த ஆண்டு இதேபோன்று சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், நாளை முதல் மலைமேல் பக்தர்கள் வீசிச் சென்ற குப்பைகளை அகற்றும் பணி நடைபெறும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் உயிரிழப்புகள்.. ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்?