சென்னை: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. அதன்பிறகு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மத்திய கிழக்கு வங்க கடலில் வரும் 25-ஆம் தேதி காலை புயலாக மாற வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் உருவாகவுள்ள இந்த புயலுக்கு 'ரீமால்' என பெயரிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை மே 26 மாலைக்குள் தீவிரப்புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மே 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம் லைலா புயல் உருவானது. அதன் பின்னர் 14 ஆண்டுகள் கழித்து தற்போது மே மாதத்தில் புயல் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜேஷ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார்.. ஐஏஎஸ் Vs ஐபிஎஸ் விவகாரத்தில் நடப்பது என்ன?