சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுவே, கரையை கடக்கும்போது, 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்னதாக, சென்னைக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு திசையில் 300 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்தது.
கடந்த 6 மணி நேரத்தில் 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஃபெங்கல் புயல்: "மழை குறைந்தது ஏன்?" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்!
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த வரும் சில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து வடமேற்கி திசையில் நகர்ந்து நாளை (நவம்பர் 29) பிற்பகல் காரைக்கால் - மகாபலிபுரத்திற்கு இடையே புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும்.
இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில், பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புயல் கரையைக் கடக்கும் போது, பலத்த காற்று மணிக்கு 70 -80 கிலோ மீட்டர் வேகத்தில், அவ்வப்போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்த தகவல்கள் தொடர்ந்து கண்காணிப்புக்கு தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, "வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்