சென்னை: சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் அண்ணா நகர் சைபர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "பாலியல் தொழில் செய்யும் பெண் என தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளம் மூலம் ஆண்களிடம் பணம் பறிக்கும் சம்பவம் நடைபெறுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
போட்டோவை வைத்து போலி கணக்கு: மேலும் தன் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பண மோசடி நடப்பதாக தனக்கு தெரிந்தவர்களில் சிலர் கூறியதை அடுத்து சம்பந்தப்பட்ட சமூக வலைதள பக்கத்தில் தன் ஆண் நண்பர் மூலமாக பேச்சு கொடுத்தோம்.
ஆபாச புகைப்படமும் பணம் பறிப்பும்: அப்போது போலியாக உருவாக்கப்பட்ட அந்த சமூக வலைதள கணக்கை கையாளும் நபரை சந்திக்க வேண்டும் என கேட்டபோது ஆபாசமாக புகைப்படம் அனுப்ப வேண்டும் என்றால் 500 ரூபாய் என்றும், வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்றால் 1500 ரூபாயும், அறையில் தனிமையில் சந்திக்க 3000 ரூபாயும் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதற்கு பணம் செலுத்துவதற்காக கூகுள் பே க்யூ ஆர் கோட்டை பேஸ்புக் மெசஞ்சர் மூலமாகவே அனுப்பினார்”.
செல்போன் எண்ணால் சிக்கிய மோசடி நபர்: இதையடுத்து புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலி சமூக வலைதளக் கணக்கை உருவாக்க பயன்படுத்தப்பட்ட இ மெயிலை யார் பயன்படுத்துகிறார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் கிடைக்கப் பெற்ற செல்போன் எண்ணும், ஜிபே க்யூ ஆர் கோடு பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணும் ஒன்று என்பது தெரிவந்துள்ளது.
இதையும் படிங்க: 'ரூட்டு தல' மோதலால் மாணவர் கொலை! மேலும் மோதலை தடுக்க போலீஸ் உஷார்
கைது செய்த போலீசார்: இதனை அடுத்து இந்த செல்போன் என்னை வைத்து சைபர் கிரைம் போலீசார் போலி சமூக வலைதளக் கணக்கு மூலம் மோசடி செய்யும் நபரை தேடியுள்ளனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் செல்போன் நெட்வொர்க் மூலம் கிருஷ்ணன் என்ற இளைஞர் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கிருஷ்ணன் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அதன் பின்பு புதுச்சேரியில் தனியார் தங்க நகை கடையில் விற்பனை பிரதிநிதியாக இருந்து வந்துள்ளார்.
விசாரணையில் வெளிவந்த திடுகிடும் தகவல்: மேலும் போலீசார் கிருஷ்ணனின் செல்போனை ஆய்வு செய்ததில் பல பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலி கணக்குகளை உருவாக்கி பல ஆண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. ஆண்கள் தன் சமூக வலைதள பக்கத்தை மெசஞ்சர் மூலமாக அணுக வேண்டும் என்பதற்காக, சமூக வலைதளங்களில் ஆபாசமாக ரீல்ஸ் வெளியிடும் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சமூக வலைதளக் கணக்கை உருவாக்கி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே பாணியில் தொடர் மோசடி: அவ்வாறு தன்னை மெசஞ்சர் மூலமாக அணுகும் ஆண்களிடம், ஆபாச வீடியோ காலில் வருவதாகக்கூறி பணம் பறித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. அவ்வாறு பணத்தை அனுப்பிய பிறகு தொடர்பு கொண்ட ஆண்களின் எண்களை பிளாக் செய்து விட்டு, மீண்டும் இதே பாணியில் அடுத்ததடுத்த ஆண்களை ஏமாற்றி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
செயலி மூலம் பெண் குரல்: சமூக ஊடகங்களில் மெசேஜ் செய்யும் ஆண்கள் சந்தேகம் ஏற்பட்டு போன் பேச நினைத்தால், 85 ரூபாய் செலவில் பெண்கள் வாய்ஸ் சேஞ்சர் என்ற செயலியை பயன்படுத்தி பெண் குரலில் அவர்களிம் பேசி ஏமாற்றி வந்ததாகவும் தனது புகைப்படம் மற்றும் குரலை கேட்டு கடந்த இரண்டு வருடமாக பல ஆண்கள் ஏமாந்துள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளார்.
இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி: மேலும் இதுவரை இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் ஏமாற்றியுள்ளதாக கூறியுள்ளார். தங்க நகை கடன் விற்பனை பிரதிநிதி வேலை முடிந்து வீடு திரும்பியதும், இவ்வாறு சமூக வலைதளம் மூலம் மோசடி செய்வதை வழக்கமாக கொண்டு பணத்தை சம்பாதித்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறையில் அடைத்த நீதிமன்றம்: இதையடுத்து கிருஷ்ணன் பயன்படுத்திய போலி சமூக வலைதள கணக்குகளை போலீசார் ஆய்வு செய்த அவர் கூறிய அனைத்தையும் உறுதி செய்தனர். பிறகு கிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்