சென்னை: இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2024 (Indian Premier League - 2024) போட்டி, மார்ச் மாதம் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (CSK vs RCB) அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் முதல் போட்டியாகத் தொடங்கியது.
மேலும், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் முடியும் வரை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைக் காண வருபவர்கள் தங்களின் ஆன்லைன் டிக்கெட்டைக் காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்து கொள்ளலாம் எனத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்திலிருந்து பிற இடங்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு (ஸ்டீல்) உலோக விசில் வழங்கப்பட உள்ளது. அதாவது, பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், உலக விசில் வழங்கப்படுவதாகச் சென்னை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து நடத்துநர்களுக்கு விசில் வழங்குவது தொடர்பாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகரப் போக்குவரத்து நடத்துநர்களுக்கு சுமார் 8 ஆயிரம் தரமான உலோக விசில்களை வழங்க உள்ளதாகவும், உலோக விசில் பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் விசில் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ் விஸ்வநாதன் கூறுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமாக "சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு விசில் போடு" என்ற வாக்கியம் உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நடத்துநர்களுக்கு விசில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். உலோக விசில்கள் நீண்ட காலம் நீடிப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஒரு சிறிய படியாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஐபிஎல் சீசனில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக ரசிகர்கள் பலனடைந்து வருவதாகத் தெரிவித்த அவர், சென்னை அணியின் போட்டியைக் காண வருவதற்கும், வீட்டுக்குச் செல்வதற்கும் போட்டியின் டிக்கெட்டை காண்பித்து இலவசமாகப் பயணித்து வருவதாகவும்" தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் 12 மணி நேரம் மழை நீடிக்கும்" - தமிழக வெதர்மேன் தந்த அப்டேட்!