சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மாட்டின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை எனக் கூறியது பேசுபொருளான நிலையில், அது உண்மை தான் என பா.ஜ.க., மூத்த தலைவரும், மருத்துவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற குப்பன் அவர்கள் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழிசை செளந்தரராஜனிடம் செய்தியாளர்கள் தரப்பில் ‘கோமியம்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
கோமியம் ஆயுர்வேத மருந்து
அதற்கு பதிலளித்து பேசிய அவர், "மாட்டின் கோமியத்தை அமிர்த நீர் என்று கூறியுள்ளனர். மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என்று கூறியுள்ளனர். இது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளில் மாட்டின் கோமியத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கோமியம் 80 வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல்ரீதியாவும், தொழில்நுட்பரீதியாகவும் ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை கல்லூரியை வழி நடத்துபவர் சும்மா கூறுவாரா?," என்று கேள்வியெழுப்பினார்.
இதையும் படிங்க |
‘என் உணவு, என் உரிமை’ என்று கூறும் நீங்கள் அறிவியல்பூர்வமாக கோமியம் மருந்து என்று கூறுவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் வினவினார்.
குப்பன் எழுதிய நூல்
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஹவுஸில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழிசை செளந்தரராஜன், குப்பன் எழுதிய நூலினை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டில் ரயில்வே துறை இன்னும் வளராமல் இருக்க காரணம், இங்கு உள்ளவர்கள் ரயில்வே துறை தகவல்களை விரிவாக தெரியப்படுத்துவதில்லை. பொங்கல் பரிசு தொகுப்பு பல லட்சம் மக்கள் வேண்டாம் என சொல்லும் நிலையில் உள்ளது. விளம்பர அரசு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.
திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றாததற்கு காரணம், அக்கறை இல்லாதது தான். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு செல்ல விஜய் பறந்து போனாரா? இல்லை மறந்து போனாரா? என்றார். மாநில அரசு தேர்வு செய்து கொடுத்த இடம் தான் பரந்தூர்.
நான் வளர்ச்சிக்கு ஆதாரவானவன் என கூறுவதை போல், நாங்களும் விவசாயிகளுக்கு ஆதரவானர்கள் தான். நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றங்கள் வழக்குகளை தீவிரப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.