சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பாக கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்காக, கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, சோமநாத சுவாமி கோயில் பக்தரான டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், கோயில் நிதியில் கல்லூரிகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பாணை வெளிடப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: காதலியுடன் சேர்ந்து கல்லா கட்டிய ஏட்டு.. அரசு அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி.. தென்காசி ஷாக்
அறநிலையத் துறை தரப்பில், குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது, அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும் எனவும், இந்த அறிவிப்பாணை தொடர்பாக ஆட்சேபம் இருந்தால், அதனை அக்டோபர் 9ம் தேதிக்குள் அறநிலைய துறை ஆணையரிடம் சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ள நிலையில், ஆட்சேபங்கள் தெரிவிப்பதை விடுத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்லூரி துவங்கும் நல்ல நோக்கத்துக்காக கோயில் நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பாணையில் தற்போதைய நிலையில் தலையிட முடியாது என உத்தரவிட்டார். அதேசமயம், நிலம் குத்தகைக்கு வழங்குவதில் முறைகேடுகள் இருப்பதாக மனுதாரர் கருதினால், தனது ஆட்சேபங்களை அறநிலையத் துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்த ஆட்சேபங்களை பரிசீலித்து, சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அறநிலைய துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்