ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருபவர் மணிக்கண்ணன். டீ வியாபாரியான இவர் சமூகத்தின் மீதுள்ள அக்கறையால் சமூக ஆர்வலராகவும் தன் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், இவரது வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வேண்டுமென கடந்த ஏழு மாதத்திற்கு முன்பாக, தான் வாடிக்கையாளராக இருக்கும் 'புகழ் இண்டேன் கேஸ் நிறுவன ஏஜென்சி'-யில் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து, மணிக்கண்ணனின் பதிவை ஏற்று அவரின் வீட்டிற்கு சிலிண்டரை எடுத்து வந்த சிலிண்டர் ஏஜென்சி ஊழியர், சிலிண்டரைக் கொடுத்துவிட்டு அதற்கு உண்டான பணத்தை வாங்காமல், கூடுதலாக 50 முதல் 100 ரூபாய் வரை கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான தகுந்த வீடியோ ஆதாரத்துடன் இதனை சமூக ஆர்வலர் மணிக்கண்ணன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அந்நிறுவனமானது, மணிக்கண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் ஏஜென்சி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாகக் கூறப்படுகிறது. மேலும், மணிக்கண்ணன் பதிவு செய்த சிலிண்டரையும், அவருக்கு விநியோகம் செய்ய பல நாட்களாக இழுத்தடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, இந்த சம்பவத்தினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மணிக்கண்ணன், இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட 'புகழ் எரிவாயு சிலிண்டர் ஏஜென்சி'-க்கு ரூ. 55 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த 55 ஆயிரம் ரூபாய் அபராத தொகையில், 40 ஆயிரம் ரூபாய் சட்டப்பணிகள் குழுவுக்கும்,10 ஆயிரம் ரூபாய் வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் மணிக்கண்ணனுக்கும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுகளுக்கும் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது.
ஈரோட்டில் மட்டுமன்றி பல மாவட்டங்களில் இது போன்று வீடுகளுக்கு விநியோயம் செய்யப்படும் எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு வரும் ஊழியர்கள், சிலிண்டர் விலையைக் காட்டிலும் கூடுதலான தொகையை வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், இதுபோன்று உரிய விலையைத் தாண்டி கூடுதலாக பணம் வசூலிப்பது குற்றம் என சமூக ஆர்வலர் மணிகண்ணன் வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார். அந்த வகையில், மணிக்கண்ணன் தொடர்ந்த வழக்கிற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், தவறு செய்த கேஸ் சிலிண்டர் ஏஜென்சி மீது 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீப்பளித்துள்ளது, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: “சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!