சென்னை: புதுச்சேரியில் 1964 ஆம் ஆண்டு முன் பிறந்த பட்டியலினதவர்களுக்கு பூர்வகுடி பட்டியலினம் என்றும் மற்றவர்கள் புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் என வகைப்படுத்தி பட்டியலின சாதி சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த பட்டியலின மாணவி ஸ்ரீநிஜா தொடர்ந்த வழக்கில்,"2024-2025 ம் ஆண்டு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக பட்டியலின பிரிவில் தகுதியான விண்ணப்பத்துடன் விண்ணப்பித்துள்ளார்.
அவர் புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் பிரிவினருக்கான சாதி சான்றிதழ் பிரிவில் பங்கேற்றதால் அவருக்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடம் கிடைக்காமல், பல் மருத்துவ படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் வில்லியனூர் தாசில்தார், ஸ்ரீநிஜாவுக்கு, அவரின் தாயாரின் ஆவணங்கள் அடிப்படையில் பூர்வீக பட்டியலினம் என்ற சாதி சான்றிதழை வழங்கினார்.
இந்த சாதி சான்றிதழின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி ஸ்ரீநிஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, "மருத்துவ படிப்பிற்கான இடங்களுக்கு கலந்தாய்வுகள் முடிந்து, தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டதால் தற்போது இடம் வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: விவாகரத்து பெற வீடியோ கால் போதும் - அமெரிக்கா வாழ் தம்பதிக்கு நீதிமன்றம் அளித்த நிவாரணம்!
இந்த உத்தரவை எதிர்த்து மாணவி ஸ்ரீநிஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வில், விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஸ்டாலின், "அபிமன்யூ ஆஜராகி, தகுதிப்பட்டியல் வெளியான பின்னர் கூட உரிய ஆவணங்களை தாக்கல் செய்யும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்.
புதுச்சேரி உயர்கல்வி மாணவர் சேர்க்கைகான சென்டாக்கின் விதியை கருத்தில் கொள்ளாமல், தனி நீதிபதி முடிவெடுத்திருப்பதாக வாதம் வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசு தரப்பில், ஸ்ரீநிஜா, புலம்பெயர்ந்த பட்டியலினத்தவருக்கான சான்றிதழ் அளித்ததன்
அடிப்படையில் தான் பல் மருத்துவ படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மனுதாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மாணவி ஸ்ரீநிஜாவின் சாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்து, மருத்துப்படிப்பிற்கான கலந்தாய்வை அவருக்கு மட்டும் நடத்த உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கான புதுச்சேரி சென்டாக் குழுவுக்கு உத்தரவிட்ட வழக்கை முடித்து வைத்தனர்.