சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் தினேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தேஜா என்பவருக்கும் பட்டாபிராம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று(பிப்.26) திருமணம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று(பிப்.26) மணமக்களை வாழ்த்தி வரவேற்கும் விதமாக அவர்களின் நண்பர்கள் ஆங்காங்கே பேனர் வைத்துள்ளனர். இந்த பேனர்களை அகற்றுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். அப்போது தினேஷ் தனது திருமணம் நாளை காலை முடிந்து விடும் என்றும், திருமணம் முடிந்தவுடன் பேனர்களை அகற்றி விடுவோம் என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், காவல்துறையினர் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததால், திருமண வீட்டாருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மணமகன் தினேஷை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதனால் மணப்பெண்ணும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்த பெண் உதவி ஆய்வாளர் வசந்தி திருமண வீட்டாரைப் பார்த்துத் தகாத வார்த்தைகளில் பேசி உள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே காவல்துறையினர் அராஜக போக்குடன் நடந்து கொண்டதாகக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவேற்பு நிகழ்ச்சியில் மணக்கோலத்தில் மணமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மதுரை-சோழவந்தான் ரயில்வே மேம்பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்