சென்னை: வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருபவர் முத்துபாண்டி (64). இவர் அதே பகுதியில் அதிமுக 12வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது மனைவி மேரி (54). இவர்கள் வழக்கம் போல் நேற்று அதிகாலை எழுந்து கடையில் உணவு விற்பனை செய்வதற்காக உணவு தயார் செய்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உணவகத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு நாட்டு வெடிகுண்டு வீசியதாக கூறப்படுகிறது. முதலில் வீசிய நாட்டு வெடிகுண்டு வெடிக்காத காரணத்தால்
இரண்டாவதாக வெடிகுண்டை வீசியுள்ளனர். இந்நிலையில், பலத்த சத்தத்துடன் வெடித்த வெடிகுண்டால் கடை முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
அப்போது, மேரிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதும் கூச்சலிடவே மேரியின் மகனான அழகு பாண்டி, வீட்டுக்குள் உள்ளே இருந்து கடைக்குள் வந்தபோது புகை மண்டலமாக இருந்ததால் தாயை மீட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெடிக்காமலிருந்த நாட்டு வெடிகுண்டைக் கைப்பற்றி விசாரணை தொடங்கினர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே சிசிடிவி காட்சி எதுவும் இல்லாததால் மற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நாட்டு வெடிகுண்டு வீசி விட்டுத் தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.