தென்காசி: கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட வீரசிகாமணி பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகள் பருத்தி எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, உழைப்பும் போட்டு பருத்திகளை பராமரித்து வந்த நிலையில், தற்போது மழையினால் பருத்தி எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த பூலோகப் பாண்டியன் என்ற விவசாயி கூறும் போது, தன்னுடைய மூன்று ஏக்கர் நிலத்தில் பருத்தி பயிரிட்டு தற்பொழுது மிதமான மழை மாறி மாறி பெய்து வருவதால், வெடித்த பருத்தி முழுவதும் ஈரம் ஆகியும், நோயின் காரணமாக கருப்படித்து விடுவதால் பருத்தி விலை போகாத நிலையில் உள்ளதாகவும், சுமார் ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், பருத்திக்காக போட்ட பணத்தை தற்போது கொடுக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்பொழுது ஒரு குவிண்டாலுக்கு 6,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மழையின் காரணமாக விலை இருந்தும் பருத்தி எடுக்க முடியாத நிலை சங்கரன்கோவில் சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, தமிழக அரசு மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தொகுதியில் ஒரே மழைக்கு அடித்துச் சென்ற தார் சாலை.. பொதுமக்கள் வேதனை! - Road Washed Away