சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் நாள் தோறும் நூற்றுக் கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலைய வளாகத்தில், தேநீர் கடைகள், சிற்றுண்டி, பழ கடைகள் என 150 கடைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சில கடை உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளானர்.
ஆக்கிரமிப்பு கடைகள்: முக்கியமாக பயணிகள் தங்களின் ஊருக்குச் செல்லும் பேருந்துகளுக்காக காத்திருப்பதற்கு கூட இடமில்லாத வகையில் நடை மேடைகள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்ததால் இது தொடர்பான புகார்கள் மாநகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்களால் அனுப்பப்பட்டு வந்தன.
தொடர்ச்சியாக புகார்கள் வந்ததையடுத்து கடந்த ஜனவரி மாதம் நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். மேலும் நடைபாதைகளை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் நடைபதைகளை ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறாக வியாபாரம் செய்து வந்தனர்.
இதையும் படிங்க: குப்பையில் வீசப்பட்ட மனுக்கள்.. சேலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்!
இந்த நிலையில் இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தலைமையிலான அதிகாரிகள் போலீசார் துணையோடு நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது வியாபாரிகள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சிலிண்டர், ஃப்ரிட்ஜ், பிஸ்கட், கூல்ட்ரிங்க்ஸ் வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மாநகராட்சி வாகனத்தில் ஊழியர்கள் அள்ளிச்சென்றனர்.
ஆணையர் எச்சரிக்கை: இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் கூறும் போது, "தற்போது ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து கடைகளை நடத்த வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடைக்கான அனுமதி ரத்து செய்யப்படும்" என தெரிவித்தார்.