நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் கட்ட சீசன் நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் கட்ட சீசன் நடைபெறும். இந்நிலையில், இரண்டாம் கட்ட சீசனுக்காக நீலகிரி குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதை தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி துவக்கி வைத்தார்.
இதனையடுத்து பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியா உள்ளிட்ட 75 வகையான மலர் செடி ரகங்களும், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம், பிரிமுளா மற்றும் ஆஸ்டர் போன்ற வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு சீம்ஸ் பூங்காவில் நடப்பட்டது.
இதில் ஒட்டுமொத்தமாக 2 லட்சம் மலர் செடிகள் பூங்காவைச் சுற்றி நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவுப் பணியை துவங்கி வைத்த நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் சிபில் மேரி, தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜயலட்சுமி, சீம்ஸ் பூங்கா மேலாளர் லட்சுமணன் உப்பட பலர் கலந்து கொண்டு மலர் நாற்றுக்களை நடவு செய்தனர்.
மேலும், இதுகுறித்து பேசிய தோட்டக்கலைத் துறையினர், “தற்போது நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்றும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சுற்றுலாப் பயணிகளின் நடைபாதை, கழிவறை, குடிநீர் வசதி, அமரும் இருக்கைகள் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: சென்னை டூ மஸ்கட்; சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு இன்று முதல் புதிய நேரடி சேவை தொடக்கம்!