நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ள நிலையில், காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் புகுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு கெத்தை பகுதியிலிருந்து வெளியேறிய ஐந்து காட்டு யானைகள், குன்னூர் அருகே உள்ள கொலகம்பை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியிலிருந்த விலை நிலங்களைச் சேதப்படுத்தியதுடன், அருகிலிருந்த ரேஷன் கடை மற்றும் வேறு இரு கடைகளை உடைத்து அங்கிருந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை சூறையாடியுள்ளது. பின் அங்கிருந்து சென்று, கிரேக்மோர் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளியின் சமையலறையை உடைத்து பருப்பு மற்றும் பொருள்களை சூறையாடியுள்ளது.
இது குறித்து ஊர்மக்கள் குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், குன்னூர் வனத்துறை வனச்சரகர் ரவிந்திரநாத் தலைமையில் ரோந்து வாகனம் மூலம் அப்பகுதிக்கு வந்து, காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு யானைகளை விரட்டினர். மேலும், காட்டு யானைகளைக் கண்டால் அவற்றை தானே விரட்ட முற்படக்கூடாது எனவும், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி அங்கிருந்து சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 60 ஆயிரம் கனஅடியை தாண்டிய நீர்வரத்து.. 5வது நாளாக தொடரும் தடை!