திருப்பத்தூர்: குஜராத் மாநிலத்திலிருந்து இருந்து பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கண்டெயினர் லாரி ஒன்று, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதே சாலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர், பெங்களூரில் இருந்து சென்னைக்கு கண்டெய்டர் லாரியை ஒட்டி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த கண்டெய்னர் லாரி ஆத்தூர் குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியுள்ளது.
லாரியின் பின்புறம் கண்டெய்னர் லாரி அதிவேகமாக மோதியதில், கண்டெய்னர் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. அதில் லாரி ஓட்டுநர் ராமன் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர், சுமார் 3 மணி நேரமாக போராடி லாரியின் இடுக்கில் சிக்கியிருந்த ஓட்டுநர் ராமனின் உடலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 4 பேர் கைது செய்த என்ஐஏ!