சென்னை: பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்காததையும், விடுதலை செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “மைனாரிட்டி அரசாக இன்று பிரதமர் மோடி அரசு இருந்து கொண்டு இருக்கிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், கடந்த காலத்தில் அவர்கள் செய்த தவறுக்கு மக்கள் பாடம் புகற்றியுள்ளனர். தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். ஒருமுறைக்கு எட்டு முறை வந்தார். எட்டு முறையல்ல, எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் உனக்கு இடம் இல்லை என்பதை நிரூபித்து காண்பித்துள்ளார்கள் மக்கள்.
இன்று(30.07.2024) பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்காததையும், விடுதலை செய்யக் கோரியும் ஆம் ஆத்மி கட்சியும்- இந்தியா கூட்டணி கட்சிகளும் இணைந்து நடத்தும் கண்டன… pic.twitter.com/opYheLoAbu
— Selvaperunthagai K (@SPK_TNCC) July 30, 2024
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டினார்கள். அதை வைத்து ஊரை ஏமாற்றினார்கள். ஆனால், அதே அயோத்தியில் ஒரு பட்டியல் இனத்தைச் சார்ந்தவரை பொது தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தது இந்திய தேசிய காங்கிரஸ். பிரதமர் மோடியின் வெற்றி நியாயமான வெற்றியா, அல்லது அறிவிக்கப்பட்ட வெற்றியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்காரர்கள் அனைவரும் திருடன் என்று பிரதமர் கூறினார். இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்களையும், பொதுமக்களையும் பாதிக்கக்கூடிய ஒரு சட்டங்களை 10 நிமிடத்தில் நிறைவேற்றி உள்ளார்கள். அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி இந்தியா முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்யும் வரை, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மேடையில் பேசிய செல்வப்பெருந்தகை, “பாஜக சித்தாந்தத்திற்கு நல்லாட்சி பிடிக்காது. அவர்களது கொள்கை, கோட்பாட்டிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் எதிராக இருக்கிறார். விசாரணை அடிப்படையில் அவரை கைது செய்து சித்திரவதை செய்வது எப்படி நியாயம்> தெலுங்கு தேசம் கட்சி 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை பாஜகவில் இழுத்துக் கொண்டனர்.
யார் மீது வழக்குகள் உள்ளதோ, அவர்கள் பாஜகவில் சேர்ந்த உடன் அவை திரும்பப் பெறப்பட்டது. அடுத்த கூட்டத்தொடரில் இந்த ஆட்சி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஜனநாயகத்தை வீழ்த்த முடியாது, அது வென்றே தீரும். அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டு வருவார். பாசிசத்திற்கு எதிராக, மோடிக்கு எதிராக குரல் கொடுப்பார்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'என்ன கொன்னது இவன்தான்'.. கனவில் வந்த ஆத்மா? நண்பன் மரணத்துக்கு 3 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழி! - karur youth murder