- சென்னை: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், அதற்கு நியாயம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளையாட்டு துறையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளையாட்டு துறையின் தலைவர் பெரம்பூர் நிஷா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறுகையில், "ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சார்ந்த வீராங்கனை வினேஷ் போகத் உலகப் புகழ் பெற்ற பல வீரர்களை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கின்ற விதமாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்த அறிவிப்பு வந்த பிறகு, அவர் எடையை சோதனையிட்டு 100 கிராம் அதிகமாக இருக்கிறார் என்று உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு நீதியை அந்த வீராங்கனைக்கு எதிராக வழங்கி தகுதி நீக்கம் செய்து இருக்கிறார்கள். எப்போதுமே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபடும்போது அதற்கு முன்பாக பரிசோதனை செய்வார்கள்.
அந்த பரிசோதனைக்கு பிறகுதான் இவர் அந்த போட்டியில் கலந்து கொள்ளலாமா என்ற சான்றிதழை வழங்குவார்கள். ஆனால் இங்கு தலைகீழாக அரையிறுதி சுற்றுக்கு சென்ற பிறகு பரிசோதனைக்கு அனுப்புங்கள் என்று 100 கிராம் எடை கூடி உள்ளது என்று தகுதி நீக்கம் செய்திருக்கிறார்கள். எதற்காக இந்தியா வாய் திருக்கவில்லை மோடி அரசு எதற்காக இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே கென்யாவில் இப்படி இது போன்று வீரருக்கு அநீதி இழைத்தார்கள், கென்யாவே பொங்கி எழுந்தது.ஐநா சபையில் புகார் செய்தார்கள், ஒலிம்பிக் கவுன்சிலில் புகார் செய்தார்கள். அந்த எதிர்ப்பு இந்தியாவில் இல்லை. மோடி ஏன் மௌனம் காக்கிறார்?, பாஜகவை சேர்ந்த பிரிட்ஜ் பூஷன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.அப்போது தங்க மங்கையாக இருக்கின்ற வினேஷ் போகத் போன்ற மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவர்கள் வாங்கிய தங்கத்தை திருப்பித் தந்தார்கள். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு இறங்கலாமா? இது தான் இந்திய மக்கள் கேட்கும் கேள்வி? இதை விட ஒரு அவமானம் இந்த தேசத்திற்கு ஏதாவது நேருமா? இன்னும் மௌனம் காத்து இருக்கிறார்களே என்ன காரணம். இந்தியா என்ற தேச முக்கியம் இல்லை அவர்களின் சித்தாந்தம் அவர்களின் அடக்குமுறை அதுதான் முக்கியம்.
இந்த தேசம் முக்கியம் என்றால் எப்படி ஒரு வீராங்கனைக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதியை பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் பழிவாங்குவதை தொடர்ந்து விளையாட்டுத்துறையில் குரல் எழுப்புபவர்களையும் பழிவாங்குகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்