சென்னை: இந்தியாவில் தொடர் ரயில் விபத்துகள் நடந்து வருவதாகவும், ரயிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது என்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ' நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திருவள்ளூர் மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் தொடர் ரயில் விபத்துகள் நடந்து வருகிறது. வந்தே பாரத் ரயிலை தொடங்கும்போது மோடி பல முறை வருகிறார். மேற்கு வங்க ரயில் விபத்து நடந்தது குறித்து அவர் அக்கறை காட்டவில்லை. கொரோனாவில் இருந்தே மக்கள் மீது மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என கூறிய சசிகாந்த் செந்தில் ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார்'' என விமர்சித்தார்.
மேலும், ''ரயில்வே லோகோ பைலட்கள் சரியாக தூங்கக்கூட முடியவில்லை.. ஒவ்வொரு லோலோ பைலட்டும் தங்களுக்கு 4 நாட்கள் தொடர்ந்து பணி வழங்குவதாக புகார் தெரிவிக்கின்றனர். 130 கி.மீ. வேகத்தில் இருந்து ஒரு கி.மீ.குறைத்தாலும் ரயில்வே நிர்வாகம் கேள்வி கேட்கிறது என லோகோ பைலட்டுகள் வேதனை தெரிவிக்கின்றனர். லோகோ பைலட்டுக்கு 2 நாட்கள் இரவு பணி வழங்கினால் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய சசிகாந்த் செந்தில், ''லோகோ பைலட்டுகளை ரயில்வே நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது. அவர்களின் தூக்கத்திற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார். மேலும், அதிவேக ரயிலை விடுவது முக்கியமில்லை, அதற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், 24-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசப்படும் எனவும், மேற்கு வங்க ரயில் விபத்தில் இறந்த 10 உயிருக்கும் மோடி தான் எமன் என்பதே தமது பகிங்கர குற்றச்சாட்டு'' எனவும் தெரிவித்தார்.
அத்துடன், ''திருவள்ளூரில் உள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.. வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. மக்களை சரளமாக சந்திக்கும் எம்பியாக இருப்பேன்" என்று அவர் உறுதி கூறினார்.
அதேபோல, "தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பேன் எனக்கூறியவர், திருவள்ளூரில் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்" என்றார்.
மேலும், ''மங்கள்யான், சந்திரயான் விடுகிறீர்கள், ரயில்வே லோகோ பைலட்டுகளை தூங்கவிடாமல் பணி செய்ய சொல்கின்றனர். இலவசத்தை ஏன் கொடுக்கிறீர்கள் என கேட்ட மோடி, இப்போது நாங்கள் வைத்த கோரிக்கையை வைத்து தான் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது'' என்றார்.
''100 நாள் பணி தான் நாடாளுமன்றத்தில் வைக்கும் முதல் கோரிக்கை எனவும் மக்களோடு நிற்பதே அரசியல்" எனவும் சசிகாந்த் செந்தில் கூறினார். தற்போது காங்கிரஸ் எதிர்கட்சியாக இருக்கும் நிலையில், இன்னும் 6 அல்லது 7 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரலாம். நீட் தேர்வு வேண்டாம் என்பதே நிலைப்பாடு.. நீட் தேர்வு சில பயிற்சி நிறுவனங்கள் பயனடைவதற்காகவே நடத்தப்படுகிறது. நீட் தேர்வு ஒரு வித்தியாசமாக அரசியல்'' என சசிகாந்த் செந்தில் விமர்சித்தார்.
மேலும், ''ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதே காங்கிரஸ் தான் எனவும், ஈவிஎம் பொறுத்தவரை முக்கிய பிரச்சினையே நான் போட்ட ஓட்டு எங்கே சென்றது என்பதே தெரியாதது தான்'' எனவும் சசிகாந்த் செந்தில் கூறினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: 10 பேர் உயிரிழப்பு... கலெக்டர் அதிரடி மாற்றம்!