திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகிறார். அவர் கடந்த இரண்டு தினங்களாகத் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், அவருக்கு ஆதரவாக திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்படக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாநகர பகுதியான டவுண் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் திறந்த வேனில் சென்றபடி கைச்சின்னத்தில் தனக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, திமுக மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் திருநெல்வேலி மேயர் சரவணன், மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால், வேட்பாளர் சார்ந்த கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு நிர்வாகிகள் கூட பிரச்சாரத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், வேட்பாளரைப் பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையில் அவரவர் கட்சிக் கொடிகளை ஏந்தியபடி சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சிக் கொடியினை மட்டும் யாரும் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியில் கடும் கோஷ்டி பூசல் நிலவுவதால் வேட்பாளர் அறிவிப்பு மிக மிகத் தாமதமானது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருநெல்வேலியில் போட்டியிட பல்வேறு முக்கிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விண்ணப்பித்தனர். எனவே, சீட் கிடைக்காத அதிருப்தியில் பலர் தேர்தலில் வேலை செய்யாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நேற்று (மார்ச்.31) பிரச்சாரம் நடைபெற்ற இடம் மாநகரப் பகுதி என்பதால், மாவட்ட காங்கிரஸ் தலைவரான சங்கர பாண்டியன் முதல் ஆளாக முன் நின்று பிரச்சாரத்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அவர் காலதாமதமாக வந்து கலந்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.
மேலும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசுவின் தீவிர ஆதரவாளர்களில் சங்கரபாண்டியனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, திருநாவுக்கரசுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அவர் காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது போன்ற சூழ்நிலையில் திருநாவுக்கரசுவின் ஆதரவாளரான சங்கர பாண்டியன் தங்கள் கட்சி வேட்பாளரின் பிரச்சாரத்தைப் புறக்கணித்திருப்பதன் மூலம் காங்கிரஸ்சில் நிலவும் கோஷ்டி பூசல் மேலும், வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
முன்னதாக, திமுக மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் தலைமையில் திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம் பள்ளிவாசல் அருகே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அதில், பங்கேற்ற சங்கர பாண்டியன் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரிக்காமல் தனக்கென்ன என்பதைப் போல் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது போன்று அவர் அடுத்தடுத்து பிரச்சாரத்தைப் புறக்கணிப்பது திமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் டிடிவி" - சீமான் குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024