தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் (35) என்ற இளைஞர், தனது திருமணத்துக்காக ஆன்லைன் செயலி மூலமாக பெண் தேடி வந்தார். அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா (30) என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து, இருவரும் பழகி வந்த நிலையில், இருவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டில் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் அரவிந்த் சத்யாவுடன் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், சத்யா பெயரை ரேஷன் கார்டில் இணைக்க முயன்ற போது சத்யாவின் கணவராக மற்றொருவர் பெயர் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ், உடனடியாக தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக சத்யாவின் சொந்த ஊரில் விசாரிக்க ஏற்பாடு செய்தார்.
முதல் புகார்: அதன்படி விசாரிக்கையில், சத்யா ஏற்கனவே பல பேருடன் திருமணமாகி அவருக்கு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, சத்யாவிடம் சாதுர்யமாக பேசி தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற மகேஷ், காவல் நிலையத்தில் வைத்து அவர் மீது புகார் கொடுத்தார். சுதாரித்துக்கொண்ட சத்யா, காவல் நிலையத்தில் இருந்து நைசாக தப்பித்துச் சென்று விட்டார்.
மேலும், மகேஷ் பல்வேறு இடங்களிலும் விசாரித்ததில் சத்யாவால் பலர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மேலும் நான்கு பேர் சத்யா மீது தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது, 50க்கும் மேற்பட்டோரை சத்யா திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம், நகை போன்றவற்றை திருடிக் கொண்டுச் சென்று விடுவது தெரியவந்தது. மேலும், இவர் மூலம் ஏமாற்றப்பட்ட பலரும் இதனை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விசாரணையில் பகீர்: சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவரில் இருந்து காவல் துறையினர் என பல தொழிலதிபர்கள் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். பணம் பறிப்பதற்காக ஆண்களை ஏமாற்றி பதிவு திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் சத்யா. ஒவ்வொரு பதிவு திருமணத்துக்குப் பிறகும் ஏதாவதொரு பிரச்சினையை கிளப்பி சம்பந்தப்பட்ட ஆண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்கள் வாயாலேயே விவாகரத்து கேட்கும் அளவுக்கு சாமார்த்தியமாக வேலை பார்த்துள்ளார் சத்யா.
அதன்படி, விவாகரத்து கேட்டால் பணம் கேட்டு மிரட்டுவதும் அதன் மூலமாக பணம் பறிப்பதையும் தொழிலாகக் கொண்டு 52க்கும் மேற்பட்ட ஆண்களை சத்யா ஏமாற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாணி ராணி சத்யாவை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தல்? போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!