சேலம்: சேலம் பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் தங்கவேல் பல்கலைக்கழக ஆவணங்களை திருடி வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு அவர் மீது குற்ற வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என இன்று (மே 9) உயர்கல்வித்துறை அரசு செயலருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் தங்கவேல் பல்கலைக்கழக ஆவணங்களைத் திருடி வெளியிட்டதாக பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன், உயர்கல்வித்துறை அரசு செயலருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் என் மீது புகார் அளித்தது தொடர்பாக விரிவான அறிக்கையை அரசுக்கு உடனே அனுப்பும்படி கோரப்பட்டு இருந்தது. அப்போது பணியில் இருந்த பொறுப்பு பதிவாளர் தங்கவேல், விசாரணைக் குழு அமைத்து நான்கு அமர்வாக விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தங்கவேல் ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து, கடந்த வாரம் பத்திரிகையாளர்களுக்கு என் விசாரணை தொடர்பான சில படங்கள் வீடியோவை அனுப்பி வெளியிட வைத்துள்ளார். விசாரணை முடியாத நிலையில், அந்த ஆவணங்கள் வீடியோக்களை பொதுவெளியில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பரப்பிடச் செய்துள்ளார்.
அரசு சார்பில் அனுப்பிய ஆவணங்களை திருடி, அதை சமூக ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார். இது ஆவண திருட்டு, அதேபோல தன் ஆவணங்கள் மடிக்கணினியில் இருப்பதாகவும், அவ்வப்போது வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் தமிழ்நாடு அரசு தலையிட்டு அவர் மீது குற்ற வழக்கு பதிந்து மடிக்கணினி மற்றும் அவரிடம் உள்ள பல்கலைக்கழக ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.